அச்சிறுபாக்கம், ஆக. 1-மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நேற்று எலப்பாக்கம் ஊராட்சியில் துவங்கியது.இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத் திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின்வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.எலப்பாக்கத்தில் நடந்த முகாமில், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில், பொதுமக்களிடமிருந்து, 942 மனுக்கள் வரப்பெற்றன.திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் நடந்த முகாமில், மானாமதி உட்பட சுற்றியுள்ள பையனுார், ஆமூர், சிறுதாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த, 300க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.அதில், மானாமதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்; புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.