செங்கல்பட்டு : கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக, தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக கடந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலுார், வில்லியம்பாக்கம், ஆத்துார், செங்கல்பட்டு வழியே சென்று, கல்பாக்கம் அருகில் வாயலுார் பகுதியில் கடலில் கலக்கிறது.இந்த ஆற்றங்கரை ஓரம், 200க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழையசீவரம், வல்லிபுரம், வாயலுார் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பணைகள் கட்டப்பட்டன.பருவ மழைக்காலங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையில், தற்போது கோடை காலம் என்பதால், பாலாற்றில் தண்ணீர் வறண்டு, ஆங்காங்கே சிறு குட்டைகள் போல தண்ணீர் தேங்கி உள்ளது.குறிப்பாக, பாலுார், வில்லியம்பாக்கம், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இல்லாமல், ஆங்காங்கே புதர்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது.இதன் காரணமாக, ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்யும் சுற்றியுள்ள கிராம மக்கள், நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கூறுகின்றனர்.