தாம்பரம்:கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மன்னா, 35. இவரது மனைவி அனிதா, 32. இருவரும், தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.நேற்று காலை 6:30 மணிக்கு, தாம்பரம் - முடிச்சூர் சாலையில், தாம்பரம் மேம்பாலம் இறங்கும் பகுதியில், தர்மன்னா, அனிதா உட்பட நான்கு பேர், டிராக்டரில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, லோடு வேன் ஒன்று தக்காளி ஏற்றிக்கொண்டு, மேம்பாலத்தில் இருந்து முடிச்சூர் சாலை வழியாக வேகமாக சென்றது. மேம் பாலம் இறங்கும் இடத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது மோதி, குப்பை சேகரிக்கும் டிராக்டரின் பின்பகுதியில் மோதியது.இதில், இரண்டு வாகனங்களுக்கும் இடையில் சிக்கிய தர்மன்னா, மனைவி கண் எதிரே உயிரிழந்தார். மற்றொரு நபரான லட்சுமணன், 23, படுகாயமடைந்தார்.ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாகவே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தர்மன்னாவின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.லட்சுமணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய லோடு வேன் ஓட்டுனரான திருச்செந்துாரைச் சேர்ந்த சக்திவேல், 22, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.