சென்னை:இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க திட்டத்தில், கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் கைவிடப்படுவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திடீரென அறிவித்தது. இது, அப்பகுதிவாசிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் விரிவாக்கத்தில், சிறுசேரி - கிளாம்பாக்கம்; பூந்தமல்லி - பரந்துார்; கோயம்பேடு - ஆவடிக்கு சேவை நீட்டிப்பது குறித்து திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை தனியார் நிறுவனங்கள் வாயிலாக அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் வழங்கியது.அரசின் ஒப்புதலை தொடர்ந்து, கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் இடையே, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.அதேநேரம், போதிய பயணியர் இல்லாததால், கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ விரிவாக்க திட்டம் கைவிடப்படுவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ நிர்வாகம் தயாரித்த திட்ட அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளை கணக்கீடு செய்ததில், 'பீக் ஹவர்'களில் ஒரு மணி நேரத்தில் 14,000த்துக்கும் மேல் பயணிக்க வேண்டும். ஆனால், கிளாம்பாக்கம் - சிறுசேரி திட்டத்தில், 'பீக் ஹவர்' பயணியர் எண்ணிக்கை 5,000த்தை தாண்டவில்லை என, நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தான், திட்டம் இப்போதைக்கு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் இடையே, 'பீக் ஹவர்' கணக்கீடு செய்யப்பட்டதில், பயணியர் எண்ணிக்கை 20,000த்தை கடந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தற்போது தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் நிறுவனங்களும் குடியிருப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளன. அதற்கேற்ப மக்கள் நெருக்கமும் அதிகரிக்கும் எனவே, இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என, சிறுசேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிளாம்பாக்கம் - சிறுசேரி முக்கியமான இணைப்பு என்பதால், பயணியரின் கோரிக்கையை ஏற்று, மாற்று வழித்தடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிறுசேரியில் 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20,000த்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு, சிறுசேரி- - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் உதவியாக இருக்கும். அதேபோல, கிராமப் பகுதிகளில் இருந்து சிறுசேரிக்கு புதிதாக வேலை தேடி வருவோர், ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் கைவிடப்பட்டது ஏமாற்றமாக உள்ளது.- எம்.ஆனந்தன்,மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி,தனியார் நிறுவனம், திருப்போரூர்.கிளாம்பாக்கம்- - சிறுசேரி மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது, அனைத்து தரப்பினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல், நேர விரயம் தவிர்க்கப்படும். பல்வேறு பகுதி மக்களும், கிளாம்பாக்கம் அருகே உள்ள வண்டலுார் - -கேளம்பாக்கம் சாலையில் பயணிக்கின்றனர். அதேபோல், சிறுசேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்தவர்கள், வெளியூர் செல்வதற்கு கிளாம்பாக்கம் செல்ல வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை துவங்கினால், கிளாம்பாக்கம் - -சிறுசேரி இடைப்பட்ட பகுதிகள் மேம்படும். தற்போது, திட்டம் கைவிடப்பட்டதால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்.- சி.கணேஷ், மென்பொறியாளர், கேளம்பாக்கம்.