| ADDED : மே 28, 2024 11:38 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்து, ஜி.எஸ்.டி., சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விபத்துக்குள்ளான கார் ஒன்று, நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள், மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.கார் தீப்பற்றி எரிந்த பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காரில் எரிபொருள் இருந்ததால்,கார் முழுதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தால், மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து, சமூக ஆர்வலர் மகேஷ்குமார், 33, கூறியதாவது:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்துக்குள்ளான வாகனங்களை பறிமுதல் செய்து வரும் போலீசார், போதிய இடவசதி இன்றி உள்ளதால், ஜி.எஸ்.டி., சாலை ஓரம் நிறுத்தி வைக்கின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் எரிபொருளை எடுத்து, உரிமையாளரிடம் ஒப்படைத்த பின், வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு, செய்வதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.