செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய குடும்ப அட்டை வழங்கக்கோரி, 9,121 பேர் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பணிக்காக, ஓராண்டாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. அவற்றை சரிபார்க்கும் பணியில், வட்ட வழங்கல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில், நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசு வழங்கும் உதவி தொகைகள், பேரிடர்கால நிவாரணம் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சேர்க்கைக்கு, ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்துள்ள தகுதியான குடும்ப தலைவியருக்கும், மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.அதற்கும் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளதால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் அதிகரித்துள்ளனர். இதுமட்டும் இன்றி, கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து, தனி ரேஷன் கார்டு மற்றும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ரேஷன் கார்டுகளில், திருமணமான பலர் பெயர் நீக்கம் செய்யக்கோரி விண்ணப்பம் செய்து, புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு விண்ணப்பித்துள்ளோரே அதிக அளவில் உள்ளனர்.புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை, கடந்த ஓராண்டு காலமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு வழங்கக்கோரி, முதல்வர் மற்றும் கலெக்டரிடம் மனுக்கள் குவிந்து வருகின்றன. இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது, மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் 2,200 பேர், மதுராந்தகம் தாலுகாவில் 1,175 பேர், செய்யூர் தாலுகாவில் 975 பேர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 980 பேர், திருப்போரூர் தாலுகாவில் 1,203 பேர், வண்டலுார் தாலுகாவில் 2,588 பேர் என, மொத்தம் 9,121 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இந்த விண்ணப்பங்களை சாரிபார்க்கும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில், ரேஷன் கார்டு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணியில், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி முடிந்தவுடன் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், அரசு உத்தரவுக்கு பிறகு. புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கப்படும்.- மாவட்ட வழங்கல் அலுவலர்கள்,செங்கல்பட்டு.
தாலுகா விண்ணப்பம்
செங்கல்பட்டு 2,200மதுராந்தகம் 1,175செய்யூர் 975திருக்கழுக்குன்றம் 980திருப்போரூர் 1,203வண்டலுார் 2,588மொத்தம் 9,121செங்கல்பட்டு