மேலும் செய்திகள்
பிடிவாரன்ட் குற்றவாளி சிக்கினார்
01-Oct-2025
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
01-Oct-2025
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில், 4,000 கான்கிரீட் வீடுகள் கட்ட, 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்காக, மாவட்ட பகுதிகளில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணி துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பசுமை வீடு வழங்கும் திட்டம் என்ற பெயரில், குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.கடந்த 2021ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என பெயர் மாற்றி, குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், ஒரு வீடு கட்ட 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த மார்ச் 15ம் தேதி அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் 4,000 வீடுகள் கட்ட, 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஒரு வீட்டின் மொத்த திட்ட மதிப்பிட்டு தொகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு 90 மனித சக்தி நாட்களும், கழிப்பறைக்கு 10 மனித சக்தி நாட்களும் அடங்கும். கழிப்பறை கட்ட, துாய்மை பாரத திட்ட நிதியாக 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் உள்ள குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் பற்றியான கணக்கெடுப்பு, 2018ம் ஆண்டு நடத்தப்பட்டது, அதன் வாயிலாக, 30,651 வீடுகள் இருப்பது தெரிந்தது.தொடர்ந்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், 2016- - 17 மற்றும் 2019 - 20ம் நிதியாண்டில், 19,372 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. 2021- - 22ல், 11,217 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன.தற்போதைய நிலவரப்படி, 4,000 குடிசை வீடுகளுக்கு மாற்றாக, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்ட அரசு உத்தரவிட்டது. அதற்காக, 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடிக்க, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.தற்போது, குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின், தகுதியான பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.
மொத்தம் 360 சதுர அடி பரப்பில், இந்த கான்கிரீட் வீடு அமைகிறது. இதில், 300 சதுர அடியில் கான்கிரீட் வீடு; 60 சதுர அடியில், தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு, பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சமையலறை கட்ட வேண்டும்.பயனாளிகளின் வங்கி கணக்கில், இதற்கான தொகை நேரடியாக செலுத்தப்படும். கட்டுமான பொருட்களுக்கான சிமென்ட் மற்றும் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள், ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக வழங்கப்படும்.சொந்தமான நிலம் அல்லது பட்டா உள்ளவர்கள் மட்டுமே, வீடு கட்ட தகுதியானவர்கள். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்கு பதிலாக, இத்திட்டத்தின்கீழ் வீடு கட்ட இயலாது.
01-Oct-2025
01-Oct-2025