| ADDED : ஜூன் 25, 2024 05:35 AM
மதுராந்தகம், : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதுார் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், கடந்த 15 நாட்களாக, அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும், காலை மற்றும் இரவு நேரத்தில், குறைந்த மின் அழுத்தத்தில் மின் வினியோகம் செய்யப் படுவதால், வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதடைவதாகவும், அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விரக்தியடைந்த கிராம மக்கள், நேற்று காலை மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலையில், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சாலையில் எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு அரசு பேருந்துகளை சிறை பிடித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள்,மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, தொடர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.