உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் கிணறுகள் தோண்ட எதிர்ப்பு கருத்துக்கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

குடிநீர் கிணறுகள் தோண்ட எதிர்ப்பு கருத்துக்கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து, இரண்டு கிணறு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும், கடந்தாண்டு 'ஜல் ஜீவன் மிஷன்' கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, தையூர் பகுதியில் மீண்டும் இரு கிணறுகள் தோண்டி, அங்கிருந்து கோவளம் பகுதிக்கு குடிநீர் வழங்க பணிகள் துவக்கப்பட்டன.இதற்கு தையூர் பகுதி வாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, கிணறு தோண்டும் பணி கைவிடப்பட்டது.பின், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து, ஏரியில் இயந்திரங்கள் மூலம் மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு

இந்நிலையில், கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து, கடந்த ஜூன் 26ம் தேதி செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.பின், கடந்த 2ம் தேதி கூட்டம் நடந்தது. இதில், கேளம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தோர் அதிகஅளவில் பங்கேற்காததால், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.முன்னதாக 8ம் தேதி ஊராட்சி மக்கள் தரப்பில் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.இதில், செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து கேளம்பாக்கம் வாசிகள் கூறியதாவது: எங்கள் வீட்டில் 180 அடி ஆழ்துளை கிணறு அமைத்தோம். ஆனால் தண்ணீர் வரவில்லை. இப்படி இருக்க இத்திட்டத்தை கைவிட வேண்டும். வண்ணான் ஏரியில் நீர்வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து கால்வாய் இல்லாததால், நீர்வரத்தும் இல்லாமல் உள்ளது. எனவே, இந்த ஏரியில் திட்டம் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.ஊராட்சியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.நெம்மேலியில் செயல்படுத்தப்படும் கடல் நீரை, குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கோவளம் பகுதிக்கு தண்ணீர் கேட்க முயற்சி செய்ய வேண்டும்.

பரபரப்பு

முதலில் எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு கிணறுகளை தோண்டி, அதன் வாயிலாக பெறப்படும் நீரை பயன்படுத்துகிறோம்.ஏற்கனவே, கேளம்பாக்கம் ஊராட்சியில், இரண்டு நாட்கள் மட்டும் தான் குடிநீர் வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுகின்றனர். இப்படி இருக்க இத்திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதை தொடர்ந்து, கேளம்பாக்கம் வாசிகள் கூறிய கருத்தை மீண்டும் மீண்டும் சொன்னதால், ஏற்கனவே கூறிய கருத்தை மீண்டும் கூறாதீர்கள் என, சப் - கலெக்டர் கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த கேளம்பாக்கம் வாசிகள், கூட்டத்தை பாதியில் புறக்கணித்து வெளியே சென்றனர். அதன்பின், பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் முன், கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, தங்கள் கோரிக்கை மனுவை சப் - கலெக்டரிடம் வழங்கினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை