சாலையோர முட்செடிகளை அகற்ற
கரும்பாக்கம்வாசிகள் கோரிக்கை
திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், கரும்பாக்கம் அருகே சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.இதில், சில பகுதிகளில் மட்டும், துறை சார்ந்த ஊழியர்கள் முட்செடிகளை அகற்றிவிட்டு, மீத பகுதியில் அகற்றாமல் சென்றனர். எனவே, விடுபட்ட பகுதிகளிலும் சாலையோர முட்செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.அருள், கரும்பாக்கம்.அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு
கழிவுகள் அப்புறப்படுத்தப்படுமா?
திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள நான்கு மாடவீதிகளிலும், சாலை மற்றும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.ஆனால், அகற்றப்பட்ட கட்டட கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல், மாடவீதிகளில் அப்படியே கிடக்கிறது. இதனால், மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கட்டட கழிவுகளால் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தமுடியவில்லை. ஏற்கனவே இருந்த இடையூறை விட, இன்னும் கட்டடக் கழிவுகளால் அதிகரித்தபடியே தான் உள்ளது.எனவே, மாடவீதிகளில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டட கழிவுகளை, அங்கிருந்து உடனே அகற்ற, சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பூபாலன், திருப்போரூர்.பள்ளி எதிரே வேகத்தடை
சித்தாமூரில் எதிர்பார்ப்பு
சித்தாமூர் பஜார் பகுதியில், அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு, 45 மாணவர்கள் படித்து வருகின்றனர். செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால், சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.வேகமாக செல்லும் வாகனத்தால், பள்ளி மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், குழந்தைகளின் நலன் கருதி, பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சம்சுதின்,சித்தாமூர்.சாலையோர பள்ளத்தால்
தாலிமங்கலத்தில் ஆபத்து
மறைமலை நகர் -- ஆப்பூர் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், தாலிமங்கலம் பகுதியில், சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். எனவே, இதனை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ஞானசேகரன், மறைமலை நகர்.மழைநீரில் நனைந்த குப்பை
காயரம்பேடில் துர்நாற்றம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகர் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையில். சாலையோரம் குப்பை தேங்கி உள்ளது.அதில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் அப்பகுதிவாசிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.எனவே, தேங்கியுள்ள மழைநீரில் நனைந்து துர்நாற்றமடிக்கும் குப்பை கழிவுகளை அகற்றி, அப்பகுதி முழும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பிரபாவதி, விஷ்ணுபிரியா நகர்.