செங்கல்பட்டு:முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில், நோயாளிகள் சிகிச்சைக்கான தொகையை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாஸ்கரன், சுகாதார இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணிதரன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஆசைதம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கின்றனர்.ஆனால், முழுமையான தொகை வழங்காமல் குறைவாக தருகின்றனர். முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வாங்குதில் சிரமம் உள்ளதாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தரப்பில் குற்றம்சாட்டினர்.அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில், சிகிச்சை பெறுவோரின் சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனைகளுக்கு முழுமையாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டும். காப்பீடு அட்டை இரண்டு நாட்களில் வழங்க வேண்டும்.மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.பழைய காப்பீடு அட்டைகளையும் புதுப்பித்து, உடனுக்குடன் வழங்கினால் தான், நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். மக்களுக்காக, அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.