உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியின் சாதாரண கூட்டம், நகரமன்ற தலைவர் தேன்மொழி தலைமையில், நேற்று நடந்தது. ஆணையர் ஆண்டவர் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

ரமேஷ் - தி.மு.க.:

வேதசாலம் நகரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். சாலையில் நாய், கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மதுராந்தகம் நகராட்சிகளில், நாய்களை பிடித்து கருத்தடை செய்கின்றனர். அதேபோல், நகராட்சியிலும் செயல்படுத்த வேண்டும்.சுகாதார அலுவலர்:நாய்களுக்கு கருத்தடை செய்ய, மற்ற நகராட்சிகளிடம் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரவுவேல் - தி.மு.க.:

செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் பள்ளிகள் உள்ளன. இப்பகுதிகளில், காலை 8:00 - 9:30 மணி வரையும், மாலை 4:30 - 5:30 மணி வரையும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. புலிப்பாக்கம் பகுதியில் விபத்து நடைபெறுவதாக கூறி, சாலை மூடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், இதே சாலையில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.புலிப்பாக்கம் பகுதியில், பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்தி, வழக்கம்போல், சென்னை செல்லும் வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரமன்ற தலைவர்:

நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீசாரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தியா - தி.மு.க.:

தனியார் நிறுவனம் குப்பை எடுக்க, மாதந்தோறும் 24 லட்சம் ரூபாய் நகராட்சி நிர்வகாம் வழங்குகிறது. என் வார்டில் 450 வீடுகளில் முறையாக குப்பை சேகரிக்க வருவதில்லை. இதனால், சாலையில் குப்பை தேங்குகிறது.ஒரு வார்டுக்கு, மூன்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, இரண்டு பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். குப்பையை முறையாக அகற்றி, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ரமேஷ் தி.மு.க.:

நகரில், குப்பை எடுக்கும் பணிகளை, தனியார் மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பதில்லை. வீடு வீடாக சென்று, குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும். குப்பையை சாலையில் போட்டால், வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

நகரமன்ற தலைவர்:

நகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று குப்பைகள் வாங்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அமுல்ராஜ் - வி.சி.:நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்க பழவேலியில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டது. இப்பணியை மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும். தட்டான்மலை பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பணிகள் நிறைவுபெறமால் உள்ளது.

நகராட்சி பொறியாளர்:

குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பானுப்பிரியா, அ.தி.மு.க.:

குண்டூர் மக்கள் பயன்பாட்டிற்காக, சுடுகாட்டிற்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. சுடுகாட்டு பகுதியில் சுற்றுசுவர் அமைத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.இந்த கூட்டத்தில், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ