செங்கல்பட்டு, செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், வையாயூர் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒன்பது வார்டு பெண் உறுப்பினர்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.வையாவூர் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, துணை தலைவர் மற்றும் வார்டு பெண் உறுப்பினர்கள், கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு:ஊராட்சியில், ஊராட்சி மன்ற கூட்டம் ஆறு மாதமாக கூட்டப்படவில்லை. இதனால், ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முடங்கி உள்ளதால்,மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் சாலை, சுகாதார வசதியின்றி உள்ளது.ஊராட்சியில், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள வீட்டு மனைகளுக்கு, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், ஊராட்சி சார்பில் கட்டட மனைப்பிரிவு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மனு மீது, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, கல்வி உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள், பேருந்து வசதி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 359 மனுக்கள் வரப்பெற்றன.இம்மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மாவட்டத்தில் ஐந்து ஊராட்சிகளுக்கு, களநீர் பரிசோதனை பெட்டிகள் வழங்கப்பட்டன.