வில்லியம்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் உள்ளூர்வாசிகளின் தலையீடு அதிகரிப்பு கொளத்துார் விவசாயிகள் குற்றச்சாட்டு
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், காஞ்சிபுரம் சாலை அருகில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு, வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், பாலுார், ஆத்துார், கொளத்துார், குருவன்மேடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், உள்ளூர்வாசிகளின் தலையீடு அதிக அளவில் உள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்வோர், ஆத்துார், வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள், தங்கள் ஊரை சேர்ந்தோர் மற்றும் தங்களின் நண்பர்களின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்கின்றனர்.டோக்கன் வழங்குவதிலும் குளறுபடி செய்து, அவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.கொளத்துார் பகுதியில் இருந்து வந்துள்ள விவசாயிகளின் நெல்லை, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, கொள்முதல் செய்யாமல் உள்ளனர்.திடீர் மழை ஏதேனும் வந்தால், எங்களின் நான்கு மாத கால உழைப்பு வீணாகும். எனவே, அனைத்து விவசாயிகளிடமும், முறையாக நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.