கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கம் வருகை தரும் பயணியர், ஏ.டி.எம்., மையங்களில் பணம் பெற போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயிலில் ஏ.டி.எம்., மையங்கள் நிறுவப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மட்டும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வார விடுமுறை நாட்களில், இந்த ஒரேயொரு ஏ.டி.எம்., மையத்தில் பணம் பெறுவதற்காக, பயணியர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பதால், கூடுதல் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், இரண்டு இடங்களில் 10க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,மையங்கள் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:இரண்டு இடங்களில், மொத்தம் 10 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹிட்டாச்சி ஆகிய வங்கிகள் வாயிலாக, ஏ.டி.எம்., மையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கி ஏ.டி.எம்.,கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.இதுதவிர, பயணியர் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம்., வாகன ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில், அனைத்து வங்கி ஏ.டி.எம்., அமைக்கும் பணிகளும் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.