பம்மல்: தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மலில் மூங்கில் ஏரி வழியாக கால்வாய் செல்கிறது. ஈஸ்வரன் நகர், அய்யப்பா நகர், நாகல்கேணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர், இக்கால்வாய் வழியாக பல்லாவரம் - குன்றத்துார் சாலையை கடந்து, பெரிய ஓடை வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், பொன்னி நகர் வழியாக, சில மீட்டர் துாரத்திற்கு புதிதாக கால்வாய் கட்டி, கிருஷ்ணா நகர், நான்காவது தெரு கால்வாயுடன், மூங்கில் ஏரி வழியாக செல்லும் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.மூங்கில் ஏரியைவிட கிருஷ்ணா நகர் தாழ்வான பகுதி என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரும், மழைநீரும், கிருஷ்ணா நகர், 4, 5 தெருக்களின் கால்வாய் வழியாக ஓடுகிறது.புதிய கால்வாய் அகலமாகவும், ஆழமாகவும் உள்ளது. ஆனால், கிருஷ்ணா நகர், 4, 5 தெருக்களில் உள்ள கால்வாய், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய கால்வாய்.சமீபத்தில் பெய்த லேசான மழையில், கிருஷ்ணா நகர் ஐந்தாவது தெருவில் உள்ள குடியிருப்புகளில் கழிவு நீர் தேங்கி, அப்பகுதியினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். லேசான மழைக்கே இந்த நிலைமை என்றால், மழை காலம் துவங்கினால், இத்தெருவில் வசிக்கவே முடியாத நிலைமை ஏற்படும் என்று, அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.அதேநேரத்தில், மூங்கில் ஏரி வழியாகவும், திருப்பனந்தாள் ஏரியில் இருந்து வரும் கால்வாயை துார்வாராததும், இப்பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.அதனால், மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு, மேடான பகுதியில் இருந்து கழிவு நீர், மழைநீர், தாழ்வான கிருஷ்ணா நகர் பகுதிக்கு செல்வதை தடுக்க வேண்டும். அதேநேரத்தில், மூங்கில் ஏரி வழியாக செல்லும் கால்வாயை துார்வாரி, அதன் வழியாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.