காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனி தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.ஸ்ரீபெரும்புதுார் பொது தொகுதியில், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.இதில், வேட்பாளர் சார்ந்த கட்சி மற்றம் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, ஓட்டு சேகரிக்க துண்டு பிரசுரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் நடத்த உள்ளனர். இதுபோன்ற பணிகளில், சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்குள் சலசலப்பு, தேர்தல் சுவர் விளம்பரம் அனுமதி பெறுவதில் தாமதம் போன்ற பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, தி.மு.க.,வினர் மாவட்டந்தோறும் ஒரு 'வார் ரூம்' துவக்க வேண்டும் என, வழக்கறிஞர் பிரிவுக்கு, கட்சி தலைமை அறிவுரை வழங்கி உள்ளது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு காஞ்சிபுரத்திலும் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு செங்கல்பட்டிலும், 'வார் ரூம்' அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.இதன் மூலமாக, அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், மக்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை 'வார் ரூமில்' சரி செய்து கொள்ளலாம் என, பேசப்படுகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் லோக்சபா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவினர் கூறியதாவது:மாவட்டந்தோறும், 'வார் ரூம்' துவக்க உள்ளோம். இந்த வார் ரூமில் இருக்கும் வழக்கறிஞர்கள் தேர்தல் தொடர்பான பணிகளை கவனிப்பர். குறிப்பாக, பிரசார அனுமதி, தேர்தல் சுவர் விளம்பரம் அனுமதி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அரசு வழி காட்டிகளை முறையாக கடைப் பிடிக்க வேண்டும் என, அறிவுரை மற்றும் செயல்களை செய்வர். வேறு ஒன்றுமில்லை.இவ்வாறு அவர்கூறினார்.