திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில், முத்திகைநல்லான்குப்பம், மங்கலம், நாவலுார் ஆகிய பகுதிகளுடன், 18 வார்டுகள் உள்ளன.கடந்த 2011 கணக்கெடுப்பின்படி, 30,000 பேர் இப்பகுதியில் வசித்தனர். தற்போது, சில ஆயிரம் பேர், மேலும் அதிகரித்துள்ளனர்.இப்பகுதி குடிநீர் தேவைக்கான கிணறுகள், பாலாறு, ஏரிகள் ஆகியவற்றில் உள்ளன. ஒரு நாளிற்கு, சராசரி குடிநீர் அளவாக, நபருக்கு 70 லிட்டர் வீதம், 23.80 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.கோடை வறட்சி, பழைய குடிநீர் குழாய்கள் சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, இப்பகுதியினர் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.இப்பாதிப்பை தவிர்த்து, குடிநீர் நீராதாரத்தை பெருக்க, புதிய கிணறுகள் அமைக்கவும், பழைய குழாய்களை முற்றிலும் அகற்றி, நவீன குழாய்களாக மாற்றவும் கருதி, பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு, அரசிடம் வலியுறுத்தியது.அரசும் பரிசீலித்து, கடந்த ஆண்டு, அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ், 29.96 கோடி ரூபாய் ஒதுக்கியது.முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்., 24ம் தேதி, நெம்மேலி கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை துவக்க விழாவில், இத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். தற்போது ஒப்பந்த நிறுவனம், அதற்கான பணிகளை துவக்கியுள்ளது.