மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பாறைக்குன்று குடவரைகள் பின்னணியில், பழங்கால 'கோனேரி' நீர்நிலை உள்ளது. இந்த நீர்நிலையின் முதல் எழுத்தான 'கோ' மன்னரை குறிக்கும்.இந்த ஏரியை பல்லவர்கள் ஏற்படுத்தி பயன்படுத்தியதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் 'கோ ஏரி' என்பது, காலப்போக்கில் மருவி, கோனேரி என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த பாறைக்குன்று நீளமாக அமைந்துள்ள நிலையில், அதற்கு இணையாக மேற்கில் ஏரியும் உள்ளது. ஏரியின் கரைப்பகுதி குன்றில், ஏரியை நோக்கியவாறு பல்லவர் கால குடவரைகள் உள்ளன. அதன் அருகே உள்ள குன்றில் கலங்கரைவிளக்கம் உள்ளது.ஏரிக்கு மேற்கில், பொதுப்பணித்துறை பயணியர் மாளிகை வளாகம் உள்ளது. மேலும், இந்த ஏரி, 7 ஏக்கர் பரப்பளவு, 10 மீ., ஆழம் உடையது.இயற்கை எழில் சூழல், குடவரை, ஏரி என அமைந்துள்ள இப்பகுதி, சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது. இத்தகைய ஏரி பகுதி பராமரிப்பின்றி, துார் வாராமல் சீரழிந்து வருகிறது.இதுகுறித்து, நம் நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. தொல்லியல், பொதுப்பணி ஆகிய துறைகளின் பகுதிகள் இடையில், ஏரி உள்ள நிலையில், அதன் கட்டுப்பாடு குறித்து, இரண்டு துறைகளிடமும், அதற்கான ஆவண விபரம் இல்லை என, கூறப்படுகிறது.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், இந்த ஏரி இல்லையென ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் அத்துறை தெரிவித்தது. கடந்த 2019ல் மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்புக்கு முன், ஏரியின் அவலநிலையை கண்ட அப்போதைய கலெக்டர் பொன்னையா, துார்வாரி பராமரிக்க அறிவுறுத்தினார்.இதை தொடர்ந்து, இ.எப்.ஐ., எனப்படும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, ஏரியை துார்வாரி, கரையை பலப்படுத்தியது. கரைப் பகுதியை உயர் மற்றும் தாழ் ஆகிய மட்டங்களாக அமைத்தது. உயரத்தில் மண் சரிவு ஏற்பட்டாலும், தாழ்வில் மட்டுமே குவிந்து, ஏரியில் விழாது.மேலும், நீர்நிலை அருங்காட்சியகமாக மேம்படுத்த, நீர் பரவலாக தேங்கும் வகையில் சீரமைத்து, 'G' என்ற ஆங்கில எழுத்து வடிவ திட்டும் அமைக்கப்பட்டது.இந்த திட்டில், மூங்கில் உள்ளிட்ட தாவரங்கள் வளர்த்து, நிலைத்த நீரோட்ட சூழல், நீர்வாழ் உயிரினங்கள் வாழும் வகையில், உருவாக்க திட்டமிட்டது. சிலரது குறுக்கீடுகளால், துார் வாரியதோடு, மேம்படுத்தும் பணி கைவிடப்பட்டது.அதன்பின், தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. தாமரை உள்ளிட்ட தாவரங்கள், தற்போது அடர்த்தியாக படர்ந்து, மீண்டும் சீரழிந்துள்ளது.ஏரியை சுற்றிலும் கருவேல முட்புதர் சூழ்ந்துள்ளது. சுற்றுலா பயணியருக்கு, இவ்வூரில் வேறு பொழுதுபோக்கு இல்லை. ஏரிக்கரையில் குறுமரங்கள், மலர் செடிகள், புற்கள், இருக்கைகள், மின்விளக்குகள், நடைபாதை மற்றும் ஏரியில் படகு சவாரி ஆகிய வசதிகளுடன், சுற்றுலா பொழுதுபோக்கு தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள், தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகிறது. தற்போது, மாமல்லபுரத்திற்கு பயணியர் அதிகரித்து, சுற்றுலா களைகட்டும் சூழலில், ஏரி பராமரிப்பு, சுற்றுலா மேம்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.