உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கடலில் மீன் செயற்கை உறைவிடம்; 41 இடங்களில் ரூ.12.81 கோடியில் அமைப்பு

செங்கை கடலில் மீன் செயற்கை உறைவிடம்; 41 இடங்களில் ரூ.12.81 கோடியில் அமைப்பு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவ பகுதிகள் உள்ளன. 8,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன.மீன்பிடி மேம்பாட்டிற்காக, மீன்பிடி படகு, வலை, டீசல் ஆகியவற்றை, மானிய விலையில் அரசு வழங்குவதால், ஒவ்வொரு பகுதியிலும் மீன்பிடியை தொழிலாக செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மீன்பிடிக்கும் நபரின் எண்ணிக்கை பெருகும் சூழலில், அதற்கேற்ப மீன்வளம் இன்றி குறைந்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஆழ்கடலில் 'லாஞ்ச்' படகுகளில் மீன் பிடிப்போர், அத்துமீறி கடற்கரை அருகிலும் வந்து, இழுவை வலையில் மீன் பிடிக்கின்றனர்.பல பகுதிகளில், உள்ளூர் மீனவர்கள் சிலர், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதும் தொடர்கிறது.இதனால், மீன்குஞ்சுகள் அழிந்து, இனப்பெருக்கத்திற்கு வழியின்றி, மீன்வளம் குறைகிறது. இத்தகைய இடர்பாடுகளால், படிப்படியாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுகின்றனர்.அவர்கள் நலன் கருதி, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில், வங்க கடலில் மீன்வளத்தை பெருக்கவும், நிலைத்த வளமாக இருக்கவும், மீன் செயற்கை உறைவிடங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.மீன் வாழ்விடம் உருவாக்கி, இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துவதன் வாயிலாக, மீன்வளத்தை பெருக்க வாய்ப்பு ஏற்படும். இதற்கு முன், செயற்கை பவளப்பாறை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, மீன் செயற்கை உறைவிடம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், தற்போது 14 மீனவ பகுதிகளில், 41 இடங்களில் மீன் செயற்கை உறைவிடங்கள், 12.36 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சதுரங்கப்பட்டினத்தில் 6, பரமன்கேணி, முதலியார்குப்பம் பகுதிகளில் தலா 5, கானத்துார் ரெட்டிக்குப்பத்தில் 4, பனையூர், பெருந்துறவு பகுதிகளில் தலா 3, சூலேரிக்காட்டில் 2, நெம்மேலியில் 1 என, மொத்தம் 29 உறைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, சின்ன நீலங்கரையில் 4, ஈஞ்சம்பாக்கம், பெரிய நீலங்கரை, நைனார்குப்பம் பகுதிகளில் தலா 2, பாலவாக்கம், சின்னாண்டிகுப்பம் பகுதிகளில் தலா 1 என, மொத்தம் 12 உறைவிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, மீன்வளத்துறையினர் கூறியதாவது:மீன் செயற்கை உறைவிடம் திட்டத்தை, கடலில் மீன்வளம் பெருக்கி, மீனவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் தொலைவில், ஆழமான இடத்தில் ஏற்படுத்தும் இத்தகைய உறைவிடம், மீன்களின் வாழ்விடமாக மாறும். இனப்பெருக்கமடைந்து மீன்வளம் பெருகும்.மீன்பிடிக்கு நிரந்தர வாய்ப்பு ஏற்படும். ஒரே இழுவை வலையில், மீன்களை சுருட்டி அள்ளும், 'லாஞ்ச்' படகுகள், கான்கிரீட் பாறையால் படகு, வலை சேதமாவது கருதி, கரை பகுதிக்கும் வராது. மற்றவர்களுக்கு மீன் கிடைப்பதும் சாத்தியமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைப்பு முறை

முக்கோணம், வட்டம் உள்ளிட்ட வடிவங்களில், கான்கிரீட் கட்டமைப்புகள் தயாரித்து, கடலில் குறிப்பிட்ட சுற்றளவு பரப்பில், ஒன்றின் மீது ஒன்றாக குவித்து, பாறையாக உருவாக்கப்படும்.இத்தகைய பாறையில், நுண்ணுயிர் பாசிகள் படரத் துவங்கி, நாளடைவில் அடர்த்தியாக வளரும். அவற்றை உண்ண சிறு மீன்களும், சிறு மீன்களை உண்ண, பிற பெரிய மீன்களும் அப்பகுதியில் குவியும். மீன்கள் பெருகியும், இனப்பெருக்கமடைந்தும், மீன்வளம் பெருகும்.கல்பாக்கம் சுற்றுப்புற மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, கல்பாக்கத்தில் இயங்கிவரும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், ஏற்கனவே செயற்கை பவளப்பாறை அமைத்துள்ளது. பிற பகுதிகளில், மீன்வளத்துறை தற்போது அமைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை