பம்மல்:பம்மலை அடுத்த பொழிச்சலுார், கவுல்பஜார் பகுதிகளில், கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து விட்டதால், அப்பகுதி மக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர்.தாம்பரம் காவல் மாவட்டம், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொழிச்சலுார், கவுல்பஜார் ஊராட்சிகள், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ளன. இவ்வூராட்சிகள் ஒதுக்குப்புறமாக உள்ளதால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவை எடுக்கும் லாரிகள், இந்த ஊராட்சிகளின் எல்லையில் அடையாறு ஆற்றில் கொட்டுகின்றன. அரசியல்வாதிகளின் லாரிகள் என்பதால், போலீசார் கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மற்றொருபுறம், திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கவுல்பஜார் ஊராட்சியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் பேட்டரி வாகனம், டிராக்டர் ஆகியவற்றில் இருந்து தொடர்ச்சியாக ஐந்து பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல், வீடுகளின் முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகளில் இருந்து பேட்டரிகளை, மர்ம கும்பல் திருடியுள்ளது.அதேபோல், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள சுதர்மா நகர், சிவசங்கரன் நகர், கல்லியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் குமுறலுடன் கூறுகின்றனர். குற்ற சம்பவங்கள் அதிகரித்து, பெரிய விபரீதம் ஏற்படும் முன், ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்றங்களை தடுக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.