| ADDED : ஆக 04, 2024 12:47 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. இக்கோவில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனுக்கு, 10 நாட்கள் நடத்தப்படும் ஆடிப்பூரம் உற்சவம், கடந்த ஜூலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது.ஆக., 8ம் தேதி வரை, தினசரி உற்சவம் நடந்து, அம்பாள் வீதியுலா செல்கிறார். ஐந்தாம் நாள் உற்சவமாக, நேற்று இரவு, ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்றார். இன்று காலை, காலை 5:30 மணி - 6:30 மணிக்குள், திருத்தேரில் புறப்பட்டு உலா செல்கிறார்.இந்நிலையில், அம்பாள், அவரது தேரில் உலா வரவேண்டும், அவருடன் விநாயகர் உடனிருக்கவேண்டும் என, ஆர்வலர்கள் கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறியதாவது:சித்திரை திருவிழாவில் மட்டுமே, அம்பாள் அவரது திருத்தேரில் உலா செல்வார். ஆடிப்பூரம் உற்சவத்தில் சாதாரண தேரில் செல்வதே, நீண்டகால நடைமுறை. ஆடிப்பூர உற்சவத்தில் அம்பாள் மட்டுமே உலா செல்வதுதான் வழக்கம். வழக்கத்தை மீறி, புதிய நடைமுறைகளை புகுத்த முடியாது. இத்தகைய கோரிக்கைகளை ஏற்கவும் இயலாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.