உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குண்டூர் ஏரி சீரமைக்கும் பணி தீவிரம்; 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்

குண்டூர் ஏரி சீரமைக்கும் பணி தீவிரம்; 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில் குண்டூர் ஏரி அமைந்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரைப்பயன்படுத்தி, விவசாயம் நடந்து வந்தது. நாளடைவில் விவசாய நிலங்களில் நகர்ப்பகுதிகள் உருவாக்கப்பட்டு, குடியிருப்புகள் பெருகின. தற்போது, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, நீராதாரமாக விளங்கி வருகிறது.தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக, ஏரியில் இருந்து 1987ம் ஆண்டு, 5 ஏக்கர் நிலம் வழங்கியும், ஏரி கலங்கலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். உபரி நீர் வெளியேறுவதை தடுக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்பின், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இரண்டரை ஏக்கர் பரப்புள்ள இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதனால், தற்போது ஏரியின் பரப்பளவு 29 ஏக்கராக குறைந்துள்ளது.ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மும்மலைகளிலிருந்தும், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர் பகுதிகளிலிருந்தும், ஏரிக்கு நீர் வரத்து உள்ளது.ஏரியின் பரப்பு குறைந்ததால், மழைக்காலத்தில் ஏரி விரைவில் நிரம்பி விடுகிறது. ஏரி அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது.ஏரி கலங்கலிலிருந்து உபரி நீர் வெளியேறி, தனியார் பள்ளி தடுப்புச்சுவர் வழியாக ராகவனார் தெரு, வேதாசலம் நகர், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, கொளவாய் ஏரியில் கலக்கிறது. ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதனால், மழைக்காலங்களில் கரையை உடைத்து விடுகின்றனர். அதனால், ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி இருப்பதால், துார்வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது. நீர்வளத்துறையும் அனுமதி வழங்கியது.மத்திய அரசு திட்டமான அம்ரூத் திட்டத்தில், 2.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தில், ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்துதல், நடைபாதை, மின் விளக்குகள், அலங்கார செடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் பணிகளை துவக்கி, ஏரியின் கரையை பலப்படுத்தும் பணி, கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி மந்தமாக நடைபெற்று வந்தது.தற்போது, கரை பகுதியில் கற்கள் அமைக்கும் பணி துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.குண்டூர் ஏரி சீரமைக்கும் பணிகள், 70 சதவீதம் முடிந்துள்ளன. இப்பணிகளை, இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, செங்கல்பட்டு நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ