மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி வளாகம் உள்ளது. இவ்வளாகத்தில், கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஒன்பது கடைகள் கட்டப்பட்டன.துவக்கத்தில், சிற்பக் கலைஞர்களிடம் ஓராண்டிற்கு ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் வியாபாரத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.அவர்களுக்கு அளிக்கப்பட்ட குத்தகை காலம் முடிந்ததும், டெண்டர் விட இருப்பதாகக் கூறி, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் தெரிவித்து, மீண்டும் வாடகைக்கு அளிக்கவில்லை. அதனால், கடைகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயனின்றி, புதர் சூழ்ந்து சீரழிந்த நிலையில் உள்ளது.கடந்த 2022ல், நாட்டிய விழாவின்போது, 108 வைணவ திவ்யதேச கோவில்கள் கண்காட்சி நடத்திய தனியார் நிறுவனத்தினர், ஊழியர்கள் தங்குவதற்காக, கடைகளை சூழ்ந்த புதரை அகற்றி, புதிதாக வெள்ளையடித்து பராமரித்தனர்.அவற்றை பராமரித்து பயன்படுத்தினால், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, ஆண்டிற்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால், நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகத்தினர் கூறும்போது, ''தலைமையகத்தில் பரிந்துரைத்து, கடைகளை பொது ஏலத்தில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, தெரிவித்தனர்.