| ADDED : ஜூன் 25, 2024 05:20 AM
திருக்கழுக்குன்றம் ; திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சிப் பகுதியில், நெரும்பூர் சாலை பகுதியிலிருந்து, இருளர் குடியிருப்பு பகுதி வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை உள்ளது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள், இச்சாலை வழியில் தினமும் கடந்து செல்கின்றனர்.சாலை முடியும் பகுதியில் உள்ள தனியார் மாத்திரை ஆலைக்கு, தொழிலாளர்கள் செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், சாலை சீரழிந்தது. அதனால், அப்பகுதிவாசிகள், ஆலைத் தொழிலாளர்கள், இருளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையை சீரமைக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி நிர்வாகம் சார்பில், புதிய சாலை அமைக்க முடிவெடுத்து, ஜல்லிக்கற்கள் நிரவப்பட்டது.பல மாதங்கள் கடந்தும், சாலை அமைக்காமல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பயணியர், நிரவப்பட்டுள்ள ஜல்லிக்கற்களில் இடறி, தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இரவில் வாகனம் ஓட்டவும் இயலவில்லை. தினமும் பரிதவிக்கும் அப்பகுதியினர், வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினர், சாலையை விரைந்து அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.