மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இந்திய தொல்லியல் துறை, இந்த சிற்பங்களை பராமரித்து பாதுகாத்து வருகிறது.அத்துறை, பல ஆண்டுகளுக்கு முன், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் ஆகிய சிற்ப பகுதிகளில், பயணியருக்கு குளிர்ந்த நீர் வழங்கியது. நாளடைவில் இயந்திரம் பழுதடைந்ததால், குளிர்ந்த நீர் வழங்குவதை கைவிட்டது.கடந்த சில ஆண்டுகளாக, கோடைக்கு முன்பே, வெயில் சுட்டெரிக்க துவங்கியது. கோடையில் சிற்பங்களை காணும் பயணியருக்கு, கடற்கரை கோவில் அருகில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினாலும், அடிக்கடி இயந்திரம் பழுதடைவதால், குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை, பாறைக்குன்று குடவரை ஆகிய பகுதிகளில், முற்றிலும் குடிநீர் வசதி இல்லை. இதையடுத்து, கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கின்றனர்.தற்போது, கோடை வெயில் தகிப்பதால், பயணியர், குளிர்ந்த குடிநீர் வழங்க எதிர்பார்க்கின்றனர். நுழைவு கட்டணம் வசூலிக்கும் தொல்லியல் துறை, சிற்ப வளாகங்களில், குளிர்ந்த நீர் வழங்க, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.