உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூபாயில் மாமல்லை சிற்பம் மீண்டும் இடம்பெற எதிர்பார்ப்பு

ரூபாயில் மாமல்லை சிற்பம் மீண்டும் இடம்பெற எதிர்பார்ப்பு

மாமல்லபுரம், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், கண்கவர் சிற்பக்கலைகள் படைத்துள்ளனர்.கட்டுமான கோவில் வகையாக, பாறைக்குன்றில் வெட்டி எடுத்த கற்களில், கடற்கரை கோவில் அமைத்துள்ளனர். ஒற்றை கற்றளி சிற்ப வகையாக, நீளமான குன்றில் பஞ்ச பாண்டவருக்கு தனித்தனியே என, ஐந்து ரதங்கள் செதுக்கியுள்ளனர்.பாறை குன்று விளிம்பில், புடைப்பு சிற்ப வகையாக அர்ஜுனன் தபசு செதுக்கியுள்ளனர். பாறையின் உட்புற குடைவரை சிற்ப வகையாக, வராகர், மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன.உலகில், வெவ்வேறு வகை சிற்பக்கலைகள், ஓரிடத்தில் இடம்பெற்ற இடமாகவும், இக்கலை அருங்காட்சியகமாகவும், மாமல்லபுரம் விளங்குகிறது.முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1976ல் வந்தபோது, இச்சிற்பங்கள், அவரை கவர்ந்தன. அர்ஜுனன் தபசு சிற்பத்தில் இடம்பெற்ற அழகிய மான்கள் சிற்பம், அவரை பெரிதும் ஈர்த்தது.அவர் பிரதமராக பொறுப்பேற்ற பின், கடந்த 1984ல் மான்கள் சிற்பத்தை, 10 ரூபாய் தாளில் இடம்பெற வைத்தார். அன்றைய 10 ரூபாய் தாள், தற்போது பயன்பாட்டில் இல்லை.அதை பாதுகாத்து வைத்துள்ள சுற்றுலா வழிகாட்டிகள் சிலர், பயணியரிடம் காண்பித்து, அதில் மான்கள் இடம்பெற்ற பின்னணியை வெளிநாட்டு பயணியரிடம் விவரிக்கின்றனர்.அதற்கு முன், 1,000 ரூபாய் தாள் ராஜராஜ சோழனின் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுடன் வெளியிடப்பட்டு, நாளடைவில் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதனால், இந்தியாவின் பாரம்பரிய சின்னமாக உள்ள கடற்கரை கோவில் சிற்பம் அல்லது வேறு சிற்பத்துடன் உயர்மதிப்பு ரூபாய் தாள் வெளியிட, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி