ஒரே நாளில் பலமுறை மின்வெட்டு புதுப்பட்டினத்தில் மக்கள் பாதிப்பு
புதுப்பட்டினம்:அணுசக்தி துறையின் கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிப் பகுதிகள் உள்ளன. கல்பாக்கம் அணுசக்தி துறையினருக்கு, முக்கிய வர்த்தக சந்தையாக, இந்த இரு ஊராட்சிப் பகுதிகளும் உள்ளன.அணுசக்தி துறையினர், அத்யாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு இப்பகுதிகளில் உள்ள் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இப்பகுதிகளில் முறையாக மின் வினியோகம் செய்யப்படுவதில்லை. நேர பாகுபாடின்றி, பகலிலும், இரவிலும் என, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.சில நாட்களாக, அடுத்தடுத்து பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மின் வினியோகம் சீராக, சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆனால், மின்சாரம் வந்த அரை மணி நேரத்தில், மீண்டும் துண்டிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அப்பகுதிவாசிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி, அடிக்கடி ஏற்படும் மின் தடையால், அப்பகுதியில் வியாபாரம், தொழில்கள் முடங்குகின்றன. மாலை - இரவு வியாபாரம் கேள்விக்குறியாகிறது.இரவு நேரங்களில், வீடுகளில் புழுக்கத்தில் தவிக்கின்றனர். இருள் காரணமாக, திருட்டு சம்பவம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்பகுதி முக்கியத்துவம் கருதி, தடையின்றி மின்சாரம் வினியோகிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.