| ADDED : ஜூலை 07, 2024 10:54 PM
பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே பச்சம்பாக்கம் ஊராட்சியில், விநாயகர் கோவில் எதிரே நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.இந்த நியாய விலைக் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கியது. முறையான பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் சுவர்களில் விரிசல் அடைந்து, மோசமானது.மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் சிதிலமடைந்து உள்ளது.அதனால், மழைக் காலங்களில் மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுப்பதால், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்து வீணாவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகே இருந்த நுாலக கட்டடத்திற்கு நியாய விலைக் கடை மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. நுாலக கட்டடத்தில் போதிய இடவசதி இல்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள பழைய நியாய விலைக் கடை கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.