மறைமலை நகர்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை அருகில், 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட, 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கட்டடம், கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.ஓராண்டாக திறக்கப்படாமல் இருந்த இந்த மருத்துவமனையை விரைந்து திறக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில், கடந்த மே மாதம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், இந்த மருத்துவமனை கட்டடத்தை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, இதே வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு உள்ள திருத்தேரி துணை சுகாதார நிலையத்தையும், அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.அமைச்சர் பேசியதாவது:இந்த மருத்துவமனை வளாகத்தில் விபத்து, பாம்பு கடி, மாரடைப்பு போன்ற அனைத்து வித அவசர காலங்களிலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பர்.இதில், நான்கு மருத்துவர்கள், 12 மருத்துவமனை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு, அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், செங்கல்பட்டு மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட சுகாதார துறை அலுவலர் பரணிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.