மதுராந்தகம் - உத்திரமேரூர் சாலையில் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திக் திக்
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கக்கிலப்பேட்டையில் இருந்து பிரிந்து, புழுதிவாக்கம் கூட்டு சாலை, நெல்வாய் வழியாக, உத்திரமேரூர், காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையில், கக்கிலப்பேட்டையில் இருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலை வரை, மாநில நெடுஞ்சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ள சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனேயே பயணம் மேற்கொள்கின்றனர்.எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு, ஒதுங்கி நிற்க முடியாத அளவிற்கு, சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. அவ்வப்போது, நெடுஞ்சாலைத் துறையினரால், சாலையில் உள்ள பள்ளங்களில், தார் கலந்த ஜல்லிக்கற்கள் கலவையால் கொட்டி நிரப்பப்படுகிறது.ஆனால், அவை சில தினங்களிலேயே பள்ளங்களிலிருந்து பெயர்ந்து விடுகின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், கீழே விழுந்து அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.எனவே, நிரந்தர தீர்வாக, குறிப்பிட்ட சாலை பகுதியில், பழைய தார் சாலையை பெயர்த்து எடுத்து, புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.