உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1,837 ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்: பதற்றமான 133 இடங்களில் நுண்பார்வையாளர்கள் தேர்வு

1,837 ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்: பதற்றமான 133 இடங்களில் நுண்பார்வையாளர்கள் தேர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, 1,837 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பதற்றமான 133 ஓட்டுச்சாவடிகளில், 148 நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன ர். தமிழகத்தில், வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் -- தனி, மதுராந்தகம் -- தனி என, ஏழு சட்டசபை தொகுதிகளில், 2,825 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 755 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை.

கதவுகள் சீரமைப்பு

மாவட்டத்தில், 755 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட 1,837 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்துவதற்கான இடங்களை, தேர்தல் பிரிவு அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இந்த ஓட்டுச்சாவடிகளில் மின் இணைப்பு, கதவுகள் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும், 1,837 ஓட்டுச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணி இன்று துவக்கப்பட உள்ளது. மேலும், 133 பதற்றமான ஓட்டுச்சாவடி நிலையங்களை கண்காணிக்க, மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், தலா ஒருவர் என்ற விகிதத்தில் பணிபுரிபவர். இவர்கள் ஓட்டுச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பர். அப்போது, தேர்தல் விதிமீறல் ஏதாவது நடைபெற்றால், பொது பார்வையாளருக்கு அறிக்கை வழங்குவர். தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும், தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். கணினி சுழற்சி முறையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தலன்று மட்டுமல்லாமல், ஓட்டு எண்ணிக்கையின் போதும், ஒவ்வொரு மேஜையிலும், தலா ஒரு நுண்பார்வையாளர்கள் இருப்பர்.நுண்பார்வையாளர்கள் முன்னிலையிலேயே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தேர்தலிலும் நுண்பார்வையாளர்களின் பங்கு முக்கியம் பெறும்.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியிலும், தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார்.

அறிவுரை

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் மற்றும் முக்கியமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய, மத்திய அரசு ஊழியர்கள் 148 பேர், நுண்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் பணியில் ஈடுபட உள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், நுண்பார்வையாளர்ளுக்கு, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிவது தொடர்பாக, கலெக்டர் அருண்ராஜ், அபிஷேக் சந்திரா ஆகியோர், நேற்று பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், 'தேர்தல் நடைபெறும் நாளில், நுண்பார்வையாளர்கள் ஓட்டுச்சாவடிகளில், காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கண்காணிக்க வேண்டும்.'சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஓட்டுச்சாவடி இயந்திரங்கள் திடீரென பழுது ஏற்பட்டால், மாற்று இயந்திரம் ஏற்பாடு செய்ய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

ஓட்டு எண்ணும் மையம்

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஓட்டு பெட்டிகள் வைக்கும் இடம் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தில், கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின், பணிகளை விரைந்து முடிக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ