திருப்போரூர்,திருப்போரூரில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், சிமென்ட் கிடங்கு, சத்துணவு முட்டை கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்கு, பல்வேறு வேலைகளுக்காக, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.அலுவலக வளாகத்தை ஒட்டி தனியார் உணவகம் உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பிடி.ஓ., அலுவலக வளாகத்திற்குள் பாய்ந்து ஆலமரத்தடியில் தேங்குகிறது.பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள், அந்த ஆலமரத்தடியில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றனர். அப்போது, அங்கு தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதோடு, அரசு அலுவலக வளாகத்திற்குள் கழிவுநீர் விடும் தனியார் உணவகம் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.