உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கலெக்டர் ஆபீஸ் வரை மாநகர பஸ் இயக்க கோரிக்கை

செங்கை கலெக்டர் ஆபீஸ் வரை மாநகர பஸ் இயக்க கோரிக்கை

மறைமலை நகர்:செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், செங்கல்பட்டு நீதிமன்றம் உள்ளிட்டவை உள்ளன.மேலும், கடந்த ஜனவரி மாதம், மலையடிவேண்பாக்கம் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அலுவலக வளாகத்திற்கு, அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களும் இடம் மாறின.இந்த அலுவலகங்களுக்கு, செங்கை புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு சேவைகள் பெற வந்து செல்கின்றனர்.மேற்கண்ட அலுவலகங்களுக்கு வரும் மக்கள், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மாற்று பேருந்து ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களை நாடும் சூழல் உள்ளது.எனவே, புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை, கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்திற்கு, பொது மக்கள் திங்கட்கிழமை மனு அளிக்க வருகின்றனர். ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகளை பெற தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.அதே போல், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவற்றுக்கு சென்று வர, ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது.செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தடம் எண்: எம்500 பேருந்து, 30க்கும் மேற்பட்டவை இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகள் அனைத்தும், புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், 5 கி.மீ., தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகம் செல்ல சிரமமாக உள்ளது.எனவே, மாநகர பேருந்துகளை கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !