சாலை வளைவில் உள்ள மரத்தால் விபத்து அபாயம்
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை உள்ளது. இது, புதுச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளன. இதில் சில மரங்கள் சாலையை ஒட்டியே உள்ளன.சாலை வளைவில் உள்ள மரங்களால், முன்னே செல்லும் வாகனம் மறைக்கப்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, மின் விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.ஆகையால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலையோரத்தில் உள்ள புளியமரங்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.