செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கு, 37,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.பாலாற்றங்கரை பகுதியில், ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 86 கொள்முதல் நிலையங்களும், தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம், 18 கொள்முதல் நிலையங்களும் திறக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.பின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொமுதல் நிலையம், பிப்., மாதம் துவக்கப்பட்டது.கொள்முதல் நிலையங்களில், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்தனர். மாவட்டத்தில், 1.21 லட்சம் டன் நெல், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைக்க, செங்கல்பட்டு மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சென்னை, மதுரை, சிவகங்கை, நாமக்கல், துாத்துக்குடி, திருச்சி, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு, 37,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதில், சென்னைக்கு மட்டும் லாரிகள் வாயிலாகவும், மற்ற மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் வாயிலாகவும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.