உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த செங்கை கலெக்டர் அறிவுறுத்தல்

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த செங்கை கலெக்டர் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு:லோக்சபா தேர்தலில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணித்து, வாக்காளர்களை ஓட்டு போடுவதற்கு வலியுறுத்த வேண்டும். அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை, மண்டல அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், லோக்சபா தேர்தலையொட்டி, ஏழு சட்டசபை தொகுதி மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கான, மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டர் நேர்முக உதவியாளர் - தேர்தல் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் என, 200 பேர் பங்கேற்றனர்.இந்த பயிற்சியில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலத்தின் விபரம், நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்து வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களின் தலைவர் மண்டல அலுவலர்களாக உள்ளனர். தேர்தல் நாளன்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களை, ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து பெற்று, வரவேற்பு மையத்தில் சேர்க்க வேண்டும். மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் பிரச்னைகள் அனைத்தும், முதலில் மண்டல அலுவலர்கள்தான் பரிசீலனை செய்ய வேண்டும். அதன்பின், தொழில்நுட்ப அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, சரி செய்வதா அல்லது வேறு இயந்திரம் அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல், புள்ளி விபரங்கள் அனுப்புதல் போன்ற அனைத்து பணிகளிலும், தெளிவான புரிதலுடன் இருத்தல் அவசியம். மண்டலத்திற்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களின் சாலை போக்குவரத்து வழி விபரம் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் கட்சி அலுவலகம், சின்னங்கள் வரையப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியல் தயார் செய்து, ஒருங்கிணைந்த அறிக்கையாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்குமான பதற்றமான ஓட்டுச்சாவடி அறிக்கைகள் தயார் செய்ய வேண்டும். மண்டல அலுவலர்களின் அறிக்கையின் அடிப்படையில், பதற்றமான ஓட்டுச்சாவடி பட்டியல் உறுதி செய்யப்படும். தேர்தல் விழிப்புணர்வுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், பதற்றமான ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், ஓட்டு அளிப்பதின் அவசியத்தை விளக்கி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மேலும், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அஞ்சல் ஓட்டுப்பதிவு வழங்கிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணியையும் ஆய்வு செய்ய வேண்டும். இம்முறை புதிய மாடல் மின்னணு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. கூடுதலாக விவிபேட் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோனைகள் வழங்கி, சரியான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ