குன்றத்துார் : சென்னை அருகே குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில் 23 கல் குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை. கைவிடப்பட்ட இந்த கல் குவாரி குட்டைகளில், ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்கும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் 2016- - 17ம் ஆண்டு வறண்டன. அப்போது சிக்கராயபுரம் கல் குவாரிகளில் தேங்கியிருந்த தண்ணீரை சுத்திகரித்து, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.அதன்பின், இந்த 23 கல் குவாரி குட்டைகளையும் ஒருங்கிணைத்து நீர்த்தேக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டும், பணிகள் துவங்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், 2022 நவம்பரில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிக்கராயபுரம் கல் குவாரிக்கு வந்து ஆய்வு செய்தார்.அப்போது, 'சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரிகளை ஒன்றிணைத்து, 130 ஏக்கர் அரசு நிலம், 80 ஏக்கர் தனியார் நிலம் என மொத்தம் 210 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கமாக மாற்றப்படும்' என, தெரிவித்தார். அதன்பின் தற்போது வரை, நீர்த்தேக்கம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஆண்டுதோறும் பருவமழை நன்றாக பெய்வதால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை. இதனால், சிக்கராயபுரம் நீர்த்தேக்கதில் அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த சாதாரன மழைக்கே இந்த குவாரி முழுதும் நிரம்பி, 1 டி.எம்.சி., தண்ணீர் வரை தேங்கியுள்ளது. சிக்கராயபுரம் கல் குவாரியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. குவாரியை பார்வையிட செல்லும் கல்லுாரி மாணவர்கள் செல்பி புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுகின்றனர்.கழிவுநீர் கொட்டப்படுகிறது. தனியார் சிலர் குவாரி நீரை டேங்கர் லாரிகளில் எடுத்து விற்று லாபம் ஈட்டுகின்றனர். மாங்காடு, மலையம்பாக்கம் பகுதியில் இருந்து மழை காலத்தில் கால்வாய் மூலம் வரும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால், நீர் மாசடைகிறது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வாக, சிக்கராயபுரம் கல் குவாரியை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து செய்லபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன், கல் குவாரியை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பூந்தமல்லி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம் ஆகிய பகுதியில் இருந்து வரும் மழைநீர், மாங்காடு நகராட்சி பகுதியில் நுழைவதால், மாங்காடு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மாங்காடில் வெள்ள பாதிப்பை தடுக்க வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சாலையோரம் வழியாக சிக்கராயபுரம் கல்குவாரிக்கு செல்லும் வகையில், புதிய கால்வாய் 2022 டிசம்பரில் அமைக்கப்பட்டது.இந்த கால்வாய் வழியே மழை காலத்தில் அதிக வெள்ள நீர் கல் குவாரிக்கு செல்வதால், ஆண்டுதோறும் குவாரி விரைவாக நிரம்புகிறது. -- சிக்கராயபுரம் கல் குவாரி அமைக்க 35 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்டும்.- - நீர்வளத்துறை அதிகாரிகள்
எளிதாக தண்ணீர் கொண்டு செல்லலாம்
செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய் சிக்கராயபுரம் கல் குவாரியுடன் இணைக்க ஏற்கனவே அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக, குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய் கடக்கும் இடத்தில், 3.5 அடி உயரத்திற்கு, பெட் டேம் கட்டி, அங்கிருந்து, குன்றத்துார் சாலை மற்றும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம், 2.கி.மீ.,துாரத்திற்கு, 18 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட மூடு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகும். இதற்கு மாற்றாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மதகில் இருந்து துவங்கும் கால்வாயை சிக்கராயபுரம் குவாரியில் இணைத்து ஏரியின் மதகை திறந்தால், அதில் இருந்து எளிதாக சிக்கராயபுரம் குவாரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இதனால், நீர்த்தேக்க திட்டம் செலவை குறைக்க முடியும்.