உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்

பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் குறுகிய வாடகை இடத்தில் இயங்கும் அவலம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழும் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. அதன் உறுப்பினர்களாக இருளர்கள் உள்ளனர்.துவக்க காலம் முதல், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள, தனியார் முதலை பண்ணை வளாகத்தில், 25,000 ரூபாய் மாத வாடகைக்கு, சங்க வளாகம் இயங்குகிறது.குறுகிய இடத்தில் சங்கம் இயங்குவதால், 50 சென்டிற்கும் குறைவான இடத்தில் தான், மண் பானைகளில் பாம்புகள் பாதுகாக்கப்படுகின்றன. விஷம் எடுக்கப்படுகிறது.சங்கத்திற்கு, குறைந்தபட்சம் 2 ஏக்கர் இடம் தேவை. வர்த்தக சார்பான சங்கம் என்பதால், அரசிடம் இலவச இடம் பெற இயலாது. சங்கம் நிதி ஆதாரம் இன்றி, சொந்த இடம் வாங்கவும் இயலாது. அதனால், குறுகிய இடத்தில் இயங்கி, சங்கத்தின் வளர்ச்சி, இருளர் முன்னேற்றம் முடங்குகிறது. இருளர் கூட்டுறவு சங்கம் என்பதை அரசு பரிசீலித்து, சங்கத்திற்கு நிரந்தர இடம் வழங்க, அரசிடம் வலியுறுத்தப்படுகிறது. அரசு முடிவெடுக்காமல் இழுத்தடிக்கிறது.இதுமட்டுமின்றி, தொழில், வனம் ஆகிய துறைகளின் குளறுபடிகளால், குறிப்பிட்ட காலத்தில் பாம்பு பிடிக்கவும் அனுமதி அளிப்பதில்லை. முன், டிசம்பர் மாதமே அனுமதித்த தொழில் துறை, தற்போது தடைக்கால துவக்கத்தில் தான் அனுமதியே அளிக்கிறது. குறைவான பாம்புகளே பிடிக்க முடிவதால், தொழில் முடங்குகிறது. இருளர் வருவாய் இழந்து பாதிக்கப்படுகின்றனர்.சங்கத்திற்கு சொந்த இடமில்லை. இதற்காக இடம் அளிக்க, அரசிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அரசிடம் உள்ள நிலத்தை அளித்தால், சங்கத்திற்கு ஏற்றதாக இருக்கும். அரசு முடிவெடுத்து, இடம் அளிக்கும் என, எதிர்பார்த்துள்ளோம்.- நிர்வாகிகள்பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், வடநெம்மேலி

சங்கமும், செயல்பாடுகளும்

தமிழக அரசின் தொழில், வணிக துறையின்கீழ், கடந்த 1978 முதல், பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. அரசுத் துறை அலுவலர், சங்க செயலராக உள்ளார். நிர்வாக குழுவும், தலைவர், துணைத் தலைவர், ஐந்து உறுப்பினர்கள் ஆகியோருடன் உண்டு. இக்குழுவினர் பதவிக்காலம், கடந்த ஆண்டு முடிந்து, தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.நடப்பாண்டு, 339 பேருக்கு பாம்புபிடி உரிமம் அளிக்கப்பட்டுள்ளதுஇரண்டு முதல் மூன்று நல்லபாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தில், ஒரு கிராம் விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. நான்கு முதல் ஆறு கண்ணாடிவிரியன் பாம்புகளின் விஷத்தில், 1 கிராம் விஷமுறிவு மருந்து எடுக்கப்படுகிறது.அதேபோல், 25 முதல் 30 கட்டுவிரியன் பாம்புகளின் விஷத்தில், 1 கிராம் விஷமுறிவு மருந்தும், 125 சுருட்டை பாம்புகளின் விஷத்தில், 1 கிராம் வீதம் விஷமுறிவு மருந்தும் தயாரிக்கப்படுகிறதுவிஷம் எடுக்கப்படும் பாம்புகளை, 22 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம். வாரத்தில் ஒரு நாள் வீதம், நான்கு நாள் விஷம் எடுத்து, மீண்டும் வனத்தில், பாம்புகள் உயிருடன் விடப்படுகின்றன.ஆண்டிற்கு, சராசரியாக 500 கிராம் விஷம் எடுத்து, அதன் வாயிலாக 1.5 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி, அரசிற்கும் சில லட்சம் ரூபாய் பங்களிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 1,807 கிராம் விஷம் எடுக்கப்பட்டு, 5.43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாபமாக 2.37 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.புனே, ஹைதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விஷமுறிவு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இங்கிருந்து விஷம் அனுப்பப்படுகிறது.பாம்புகள், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, இனம்பெருக்கம் செய்வதால், அக்காலத்தில் பாம்பு பிடிப்பது தவிர்க்கப்படுகிறது. பாம்பு எண்ணிக்கை இலக்கு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம், ஓராண்டில் 13,000 பாம்புகள் பிடிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், வனத்துறை, 5,000 முதல் 8,000 பாம்புகளை பிடிக்கவே அனுமதி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ