மறைமலை நகர்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் - மகேந்திரா சிட்டி வரை, எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, பரனுார் ரயில்வே மேம்பாலம் பகுதியில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சாலை பராமரிப்பு பணிகளில், நெடுஞ்சாலை துறையினர் அக்கறை காட்டவில்லை என்பதால், சாலையின் இருபுறமும் மணல் படுகைகள் குவிந்துள்ளது.சாலையோரம் குவிந்துள்ள மணல் படுகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த மணல் படுகைகளை அகற்றி, விபத்து இல்லாத சாலையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலையில், பரனுார், மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 15 கி.மீ., துாரம் வரை, மணல் திட்டுகள் குவிந்துள்ளன.அதிக கனரக வாகனங்கள் செல்வதால், காற்றில் மணல் துகள்கள் பறந்து, வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன. சிங்கபெருமாள் கோவில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில், அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.எனவே, சாலையோரம் குவிந்துள்ள மணல் படுகையை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.