மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன். மனைவி ராஜாத்தி, ஊராட்சி துணைத் தலைவி.வேறு பகுதி கழிவுநீரை வெளியேற்ற, மீனவர் பகுதி வரை கால்வாய் கட்டியது தொடர்பாக, மீனவர்கள், துணைத் தலைவி ராஜாத்தி இடையே தகராறு ஏற்பட்டது.இதுதொடர்பாக, ராஜாத்தி, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்து, திரும்ப பெற்றார். மீனவ சபையினர், அவரது குடும்பத்தை, ஊரை விட்டு விலக்கி வைத்து கட்டுப்பாடு விதித்தனர். உறவினர்கள் ஏழு பேர் குடும்பங்களுக்கும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.மீனவர் அல்லாத தரப்பினர், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படும் நிலையில், வருவாய்த் துறையினரிடம், ராஜாத்தி கணவர் முறையிட்டார்.தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிபாஸ்கர்ராவ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர், கொக்கிலமேடில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.சர்ச்சைக்குரிய கால்வாயை இடம் மாற்றுவதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். ராஜாத்தி, உறவினர் குடும்பங்களுக்கு ஊர் விலக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். கட்டுப்பாட்டை விலக்கி விட்டதாக, மீனவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் முன்பாகவும், ஊர் கட்டுப்பாட்டை விலக்கியதாக தெரிவித்தனர்.கட்டுப்பாடு நீக்கப்பட்டவர்களுக்கு, கோவில் உற்சவ பத்திரிகையை சபையினர் அளிக்குமாறு, அதிகாரிகள் கூறினர். ராஜாத்தி குடும்பத்தினரோ, தண்டோரா போட்டு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. தற்போது விலக்கப்பட்டதும் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியதால், மற்றவர்கள் கொந்தளித்தனர்.அதனால், ராஜாத்தி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளியேறினர். கட்டுப்பாட்டை விலக்கியதை, ஒலிபெருக்கியில் அறிவிக்கவும், உற்சவத்தை பிரச்னையின்றி நடத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.மீனவ சபையினர், ஒலிபெருக்கியில் அறிவித்தனர். மீண்டும் பிரச்னை ஏற்பட்டால், இரண்டு தரப்பினர் மீதும்வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை பாயும் என, இன்ஸ்பெக்டர்எச்சரித்தார்.