திருப்போரூர் : கோவளத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திக் கொன்ற தாய் மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதியில், வாடகை வீட்டில் வசித்தவர் ஜலால், 54. இவர், கோவளத்தில் உள்ள தனியார் உணவகத்தில், சமையல் வேலை செய்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு, கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஜலால் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரித்தனர்.விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:ஜலால் வசிக்கும் வீட்டின் அருகில், உன்னிகிருஷ்ணன் என்கிற யூசுப், 74, என்ற முதியவரும் வசிக்கிறார்.கோவளம் தர்காவில் தங்கி கூலி வேலை செய்யும், மதுரையை சேர்ந்த சித்திக், 33, மற்றும் அவரின் தாய் ஆயுஷ், 57, ஆகியோர், உன்னிகிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு, சித்திக் மற்றும் அவரது தாயான ஆயுஷ் ஆகிய இருவரும், உன்னிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளனர்.அப்போது, உன்னிகிருஷ்ணன், சித்திக் இருவரும் மது அருந்தியபடி, சத்தமாக பேசிக்கொண்டிருந்து உள்ளனர். அதனால், அருகே இருந்த ஜலால், அவர்களை கண்டித்துள்ளார்.அப்போது, ஆயுஷ், ஜலாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இதில், இருவருக்கும் வாய்த்தகராறு அதிகரித்துள்ளது. தாயிடம் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த சித்திக், அங்கிருந்த கத்தியால் ஜலால் இடது மார்பில் குத்தியுள்ளார்.இதில், பலத்த காயம் அடைந்த ஜலால், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, நேற்று சித்திக், ஆயுஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.