| ADDED : மே 13, 2024 06:11 AM
கடலுார் : கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் இயங்குகிறது. கடலுார், காத்தங்கடை, வேப்பஞ்சேரி, மீனவர் குப்பங்கள் உள்ளிட்ட பகுதியினர், பல தேவைகளுக்காக அலுவலகம் வருகின்றனர்.குறுகிய அலுவலக கட்டடத்தில், மன்ற கூட்டம் நடத்தவும், சேவைகளுக்காக வரும் பொதுமக்களுக்கும் இடவசதி இல்லை.பழமையான கட்டடம், பலமிழந்ததாகவும் இருந்தது. அதன் அருகில் இயங்கிய கிராம நிர்வாக அலுவலகமும் சீரழிந்தது.எனவே, ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுக்கு, ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட முடிவெடுத்து, கடந்த ஆண்டு கட்டடம் இடிக்கப்பட்டது.புதிய ஒருங்கிணைந்த கட்டடம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், பயனின்றி வீணாகிறது.ஊராட்சி ஒன்றியக்குழு நிர்வாகிகள் பெயர் கல்வெட்டு அமைக்கும் சர்ச்சை காரணமாக, கட்டடம் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இங்கு இயங்கிய அலுவலகங்கள், வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் இடநெருக்கடியில் இயங்குகின்றன. மக்கள் நலன் கருதி, கட்டடத்தை உடனே திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.