உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருளர்கள் வீட்டுமனை பகுதியில் பேரணியாக சென்றோரால் பரபரப்பு

இருளர்கள் வீட்டுமனை பகுதியில் பேரணியாக சென்றோரால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பூஞ்சேரி, நெரும்பூர், சூராடிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருளர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இடம் இல்லை.இதன் காரணமாக கால்வாய்க்கரை, ஏரிக்கரை பகுதிகளில் குடிசையில் வசிக்கின்றனர். மழையின்போது குடிசையை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படுகின்றனர்.அவர்களின் நிலைமை கருதி, மாவட்ட நிர்வாகம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள நடுவக்கரை ஊராட்சி பகுதியில், புல எண்: 103ல் உள்ள 20 ஏக்கர் அரசு கல்லாங்குத்து இடத்தில், தலா 3 சென்ட் வீதம், 82 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது.அதே ஊரைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள், தங்களுக்கு 1980ல், அவ்விடம் நிபந்தனைக்குட்பட்ட பட்டா நிலமாக வழங்கப்பட்ட இடம் எனக் கூறி, அங்கு இருளர்களுக்கு வீட்டுமனை அளித்ததை எதிர்த்தனர். இதனால் ஓராண்டாக, இருளர்கள் குடியேற முடியவில்லை.நடுவக்கரை, குன்னவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும், அங்கு வீட்டுமனை வழங்குமாறு, வருவாய்த் துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.நேற்று, நெரும்பூர் சாலையிலிருந்து கல்லாங்குத்து நிலப்பகுதிக்கு, பேரணியாக சென்று, குடிசை அமைக்கவுள்ளதாக ஆதிதிராவிடர்கள் அறிவித்தனர்.திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான் ஆகியோர், நேற்று அப்பகுதியில் முகாமிட்டனர். பேரணியாக சென்றவர்களிடம் பேச்சு நடத்தினர்.கல்லாங்குத்து பகுதியை முழுமையாக அளவிட்டு, கோரிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக, வருவாய்த் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை