மாமல்லபுரம் : போதைப்பொருள் ஒழிப்பு, கடத்தல் தடுப்பு கருதி, கடந்த 1987 முதல், ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு, போதைப்பொருள் கட்டுப்பாட்டகம், சென்னை மண்டல பிரிவினர், மதராசி வாலா பைக்கர்ஸ் குழுவினருடன் இணைந்து, நேற்று விழிப்புணர்வு பேரணி சென்றனர்.சென்னை மத்திய கைலாஷ் பகுதியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டகத்தின் சென்னை மண்டல கண்காணிப்பாளர் ஜிதேந்தர், காலை 5:30 மணிக்கு டூ - வீலர் பேரணியை துவக்கி வைத்தார்.பைக்கர்ஸ் குழு நிறுவனர் அபிஷேக் கான் தலைமையிலான 240 பேர், பழைய மாமல்லபுரம் சாலை வழியிலேயே கேளம்பாக்கம், கேளம்பாக்கம் - கோவளம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை, இருசக்கர வாகனங்களில் பேரணி சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைக்கிள் தினம்
திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடற்பயிற்சி மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. சைக்கிள் பேரணியை, கானத்துார் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் படூர் ஊராட்சி தலைவர் தாரா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.சிறியவர்களுக்கான 10 கிலோ மீட்டர், பெரியவர்களுக்கான 30 கிலோ மீட்டர் என, இரு பிரிவுகளாக நடந்த பேரணியில், அரசு பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.