| ADDED : ஆக 14, 2024 09:40 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யஞ்சேரி பகுதியில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மைய கட்டடம், இதற்கு முன் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.பழைய கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாதபடி இருந்தது. புதிய கட்டடம் அதன் அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. புதிய கட்டடத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால், குழந்தைகள் அமரும் பகுதியில், கட்டடத்தின் மேல் இருந்த சிமென்ட் சிலாப் இடிந்து விழுந்தது.வழக்கம் போல், நேற்று வந்த அங்கன்வாடி மைய பணியாளர்கள், கதவை திறந்து பார்த்த போது, சிமென்ட் சிலாப் உடைந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.அதன்பின், அங்கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தைகளை, வீட்டுக்கு திருப்பி அனுப்பியதோடு, அந்த அறையை பூட்டு போட்டனர்.கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கட்டடம் இடிந்து விழுந்ததால், சம்பந்தப்பட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.