கருங்குழியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு எப்போது?
மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.அவர்கள், ஒரு கி.மீ., துாரத்திற்கும் மேல் நடந்து சென்று, பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நியாய விலை கடையில், ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வேளாண்மை விதை சேமிப்பு கிடங்கு அருகே, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.40 லட்சம் ரூபாயில், புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.கட்டடம் கட்டி முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், கட்டடம் இப்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தற்போது, பழைய ரேஷன் கடையில் பொருட்களை வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.எனவே, புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடத்தை விரைந்து திறக்க, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.