| ADDED : மார் 25, 2024 05:26 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, அதே இடத்தில் புதிதாக, 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதன் காரணமாக, தற்காலிக பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக, பேருந்து பயணியரிடம் இருந்து, பர்ஸ் மற்றும் துணி பைகளை பிளேடால் கிழித்து பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, வயது முதிர்ந்த பெண் பயணியரிடம், இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர்.எனவே, தற்காலிக பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும், காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.