| ADDED : ஜூன் 18, 2024 05:01 AM
பவுஞ்சூர், : பவுஞ்சூர் ஊராட்சியில், வரதராஜ பெருமாள் கோவில் எதிரே, நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.நியாய விலைக் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கியது. முறையான பராமரிப்பு இன்றி, நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், மோசமான நிலையில் உள்ளது.அதனால், மழைக்காலங்களில் மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுப்பதால், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்து வீணாகின்றன.அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகே உள்ள நுாலக கட்டடத்திற்கு நியாய விலை கடை மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. நுாலக கட்டடத்தில் போதிய இடவசதி இல்லை எனக் கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பழைய நியாய விலைக் கடை கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.