மாதாந்திர கூட்டம் நடக்காமல் வண்டலுாரில் பணிகள் பாதிப்பு
வண்டலுார், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. கடந்த 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி வெற்றி பெற்று, ஊராட்சி தலைவரானார்.இந்நிலையில், கடந்த 2024, பிப்., 29ல், தி.முக., பிரமுகர் கொலை வழக்கில், முத்தமிழ்ச் செல்வி கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று, தற்போது ஜாமினில் உள்ளார். இதனால், அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டது.தொடர்ந்து, மாதந்தோறும் நடைபெறும் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 12 மாதங்களாக நடக்கவில்லை. இதனால் ஊராட்சி உறுப்பினர்கள், தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் முன்னெடுக்க வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளன.இதுகுறித்து, வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது:எங்கள் வார்டில் என்னென்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து, ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்து பணிகளை மேற்கொள்ள, மாதாந்திர கூட்டமே வழிவகுக்கும்.ஆனால், வண்டலுார் ஊராட்சி தலைவர் அதிகாரம் பறிக்கப்பட்டதால், கடந்த 12 மாதங்களாக வார்டு உறுப்பினர் கூட்டம் நடக்கவில்லை. இதனால், அனைத்து வார்டுகளிலும் மக்கள் நலப் பணிகள் முடங்கி உள்ளன.எனவே, மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் தலைமையில் வண்டலுார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு வார்டிலும் உள்ள பிரச்னைகளை களைய ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.